கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாவதாக!
நம்முடைய வீடுகளில் நாம் அநேக பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வாங்கி வைத்திருக்கிறோம்.
அதில் பல விலையில்லாத பொருட்களும், சில விலையுள்ள பொருட்களும் அடங்கும்.
அதிக விலையுள்ள பொருளாய் இருந்தாலும் கொஞ்சங்கூட மதிப்பில்லாத பொருட்களும் உண்டு.
அதிக விலையில்லாத பொருளாயிருந்தாலும், மிகவும் மதிப்புள்ள பொருட்களும் உண்டு.
இன்று நாம் வேதத்திலிருந்து ஒரு பாத்திரத்தை பார்ப்போம். 2 தீமோத்தேயு 2:21இல் நான் உங்களுக்காக வாசிக்கிறேன், ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான் என்று எழுதியிருக்கிறது.
ஆகையினால் நாம் வாசித்த வசனத்தில் பார்த்தது, எஜமானன் எந்த நற்கிரியையும் செய்ய உபயோகிக்க பரிசுத்தமாக்கப்பட்டு ஆயத்தமாக்கப்பட்ட கனத்திர்க்குரிய ஒரு பாத்திரம்.
உதாரணமாக தண்ணீர் குடிக்கும் அல்லது தண்ணீர் கொடுக்கும் ஒரு குவளை அதாவது செம்பு.
தமிழர் பண்பாட்டில் நாம் அனைவரும் நமது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு முதலாவது கொடுப்பது ஒரு செம்பு தண்ணீர் தான். இங்கேயும் அனைவருக்கும் தண்ணீர் கொடுப்பதற்காக பாத்திரத்தில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாத்திரமும் நன்றாக கழுகிய பின்பே தண்ணீர் பிடித்து வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
தண்ணீர் கொடுத்தால் புண்ணியம் பெருகும் என்று சொல்லுவார்கள்.
ஆகவே வீடு தேடி வருபவர்களுக்கு வேறு ஒன்றும் கொடுக்காவிட்டாலும் வெறும் தண்ணீர் கொடுத்தாவது புண்ணியம் தேடிக்கொள்பவர்கள் நம்மிலும் அநேகர் உண்டு.
நாம் தண்ணீர் குடிக்கும் செம்பை அடிக்கடி சுத்தம் செய்து எப்போதும் ஆயத்தமாகவே வைத்திருப்போம் . ஏனென்றால் அதை நாம் பயன்படுத்தும்போதோ அல்லது பிறர் பயன்படுத்த நாம் கொடுக்கும்போதோ அதில் மாசு தூசி இல்லாமல் கழுகி தூய்மையானதாகவே கொடுக்க வேண்டும் என்பதற்காகவே.
அது போலத்தான் நம்மைக் குறித்தும் தேவன் விரும்புகிறார்.
முதலாவது, நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்.
இரண்டாவது, வேதத்தில் தேவன் அநேகரை உபயோகித்திருக்கிறார். உதாரணத்திற்கு மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரை மீட்க கிதியோனை பயன்படுத்தினார், பெலிஸ்த்தியனிடமிருந்து இஸ்ரவேலரை காப்பாற்ற தாவீதை பயன்படுத்தியிருக்கிறார். இன்னும் அநேகரைச் சொல்லலாம்.
இவர்களைப் போல நம்மையும் தேவன் பயன்படுத்த நாமும் உபயோகமானவர்ளாக இருக்கவேண்டும்.
மூன்றாவது, எபேசியர் 2 ஆம் அதிகாரம் 10 ஆம் வசனத்தில் எழுதியிருக்கிறப்படி நாம் நற்கிரியைகளைச் செய்கிறதற்க்காகவே கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்ட்டிக்கப்பட்டிருக்கிறோம். ஆகையினால் எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்.
நான்காவது, அது போல மத்தேயு 25:21 ஆம் வசனத்தில்
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்று தேவன் சொல்லி நம்மை கனம் பண்ணுகிறதற்கு பாத்திரவான்களாக நாம் நடக்க வேண்டும். விசுவாசிகள் நமக்கு கிடைத்த கொஞ்ச நாட்களில், வேலையில் குறைந்த சம்பளமானாலும், தொழிலும் குறைந்த வருமானமாலும், தேவைகள் சந்திக்கப் படாவிட்டாலும் கர்தருடைய வேலையில் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாக உழைக்க வேண்டும். அதுப் போல சபை ஊழியர்கள் சபைக்குப் போதுமான ஆத்துமாக்கள் கிடைத்துவிட்டது. இனி போதுமென்று இருந்து விடாமல் இன்னும் ஆதியிலிருந்த அதே துடிப்புடன் செயல்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அப்போது தான் தேவன் நம்மை உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே என்று கனம்பண்ணுவார்.
கடைசியாக, இவையெல்லாம் எப்போது நடக்குமென்றால் 2 தீமோத்தேயு 2:21இல் எழுதப்பட்டபடி “ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு”,
எவைகளை விடவேண்டும்?
இந்த அதிகாரத்தில் முந்தைய வசனங்களில் எழுதப்பட்டிருக்கின்ற சீர்கேடான வீண்பேச்சு, கள்ளப்போதனை, அவபக்தி, சத்தியத்தை விட்டு விலகுதல், மற்றவர்களுடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுதல் ஆகிய இவைகளை விட்டு விலகவேண்டும்.
அடுத்து “தன்னைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்”.
இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட நாம் அனைவரும் நம்மை இன்னும் எதினால் சுத்திகரித்துக் கொள்ளவேண்டுமென்றால், சங்கீதம் 119 : 9 இல் சொல்லப்பட்டது போல இயேசு கிறிஸ்துவின் வசனத்தினால் காத்துக்கொண்டு நம்மை சுத்திகரித்துக் கொள்ளவேண்டும்.
பிலிப்பியர் 2ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டதுப் போல ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,
எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.
இப்படிச் செய்வோமானால் நாம் 2 தீமோத்தேயு 2:21இல் குறிப்பிட்டிருக்கிறது போல பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்போம். கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் அவருடையப் பார்வையில் கனத்திற்க்குரியவர்களாக மாற்றுவாராக! ஆமென்!